கூவத்தூரில் சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் சசிகலா சிறையில் இருந்த நான்கு வருடங்களில் அதிமுகவை தனது கட்டுப்பாட்டு கொண்டு வந்தார் பழனிச்சாமி. மேலும் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கட்சிக்குள் வராமல் பார்த்துக் கொண்டார்.
ஒரு பக்கம் கட்சியில் இருந்து கொண்டே தனக்கு எதிராக வேலை செய்த ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே தூக்கினார். அதோடு மத்தியில் பல வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாஜகவின் துணையோடு தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைந்து திமுகவை தோற்கடிக்க காய்களை நகர்த்தி வருகிறார்.
2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. ஆனால் 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எனவே இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார். விஜய் தங்கள் பக்கம் வருவார் என கணக்கு போட்டார் பழனிசாமி.. ஆனால் அது நடக்கவில்லை.. அதேபோல் தேமுதிகவை தங்களின் கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியிலும் பழனிச்சாமி இறங்கினார். ஆனால் அது நடக்கவில்லை..
இந்நிலைல்தான் கடந்த ஏகாதசி அன்று அதிமுகவின் 64 வேட்பாளர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று சாமியின் பாதத்தில் பட்டியலை வைத்து வழிபாடு செய்திருக்கிறார் பழனிச்சாமி. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க முடியாத அதிமுகவுக்கு செல்வாக்கு மிக்க தொகுதிகள் அந்த பட்டியலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக பழனிச்சாமி போட்டியிடும் தொகுதி மற்றும் வேலுமணி, தங்கமணி, கேபி முனுசாமி, எம்.ஆர் விஜயபாஸ்கர், கேபி அன்பழகன், ஆர்பி உதயகுமார், விஜயபாஸ்கர், ஓ.எஸ் மணிகண்டன், சிவி சண்முகம் உள்ளிட்ட பெயர்களும் அந்த பட்டியில் இருந்ததாக சொல்லப்படுகிறது..