சென்னை கொடுங்கையூர் பகுதியில் இளைஞர்களை இலக்காக வைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கொடுங்கையூர் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த அரவிந்த் என்கிற டோலு என்பவரது வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், 420 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரவிந்த் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதும், சமூக ஊடகங்கள் மூலம் போதை மாத்திரைகளை விநியோகித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அரவிந்த் அளித்த தகவலின் பேரில், அவரது கூட்டாளிகளான சஞ்சய் , அஜித்குமார் , ரஞ்சித், பிரவீன் , மற்றும் பைசன் அகமது ஆகிய மேலும் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த ஆறு பேரிடமிருந்தும் மொத்தம் 1,166 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமூக வலைதளம் மூலம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.