சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் ஒன்பதாவது தெருவை சேர்ந்த 18 வயது அஜித் குமார் என்பவர் கடந்த 14ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்து இருந்தார். இதனை அடுத்து அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
பிரேத பரிசோதனையில் அவர் இயற்கையாக மரணம் அடைய வில்லை என்றும், கழுத்தை நெறித்து யாரோ மர்ம நபர்கள் கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் தீவிரமாகவும் விசாரணை செய்தனர்.
விசாரணையில், அஜித்குமாரை கொலை செய்தது ஜனார்த்தனன் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவர் தான் என்பது தெரிந்த நிலையில், தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது, அஜித்குமாரின் பாட்டி இறந்த போது அவரது இறுதி சடங்கிற்காக 8000 ரூபாய் பணம் வாங்கினார். அந்த பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை.
பணத்தை தராமல் ஏமாற்றிய அஜித்குமாருக்கு பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. அதனால், அவருடைய வீட்டிற்கு நேரடியாக சென்று பணம் கேட்டபோது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் கழுத்தை நிறுத்தி கொலை செய்து விட்டோம் என்று வாக்குமூலம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் அதன் பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். வெறும் 8000 ரூபாய் கடனுக்காக ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.