குன்னூர் சட்டமன்ற தொகுதியில் ஒரே வீட்டின் முகவரியில் 79 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 6-ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின்படி, கோடேரி வாக்குச்சாவடி எண் 210-ல் உள்ள ஒரு வீட்டில் (கதவு எண் 11) மட்டும் 79 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், அதே பகுதியில் உள்ள கதவு எண் 12-ல் 33 வாக்காளர்களும், கதவு எண் 9-ல் 14 வாக்காளர்களும், கதவு எண் 10-ல் 9 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்தில், அகரட்டி ஊராட்சி 12-வது வார்டு உறுப்பினர் மனோகரன், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது, இந்தத் தகவல்கள் தெரியவந்தன. கதவு எண் 11-ல் 79 வாக்காளர்கள் என குறிப்பிடப்பட்ட வீட்டில், உண்மையில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே வசிப்பதாக தெரியவந்துள்ளது. அதேபோல், 14 வாக்காளர்கள் என குறிப்பிடப்பட்ட கதவு எண் 9-ல் இரண்டு வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் தற்போது கர்நாடகாவில் வசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, வாக்காளர் பட்டியலில் 79 வாக்காளர்கள் உள்ளதாகக் கூறப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஆனந்தன், "இந்தத் தகவல் எனக்கே ஆச்சரியமாக உள்ளது. எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் மட்டுமே இருக்கிறோம். மீதி 75 பேர் யார் என்பது தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
இது குறித்து குன்னூர் தேர்தல் அதிகாரி மற்றும் வட்டாட்சியர் ஜவஹரிடம் கேட்டபோது, "இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு. 'வார்டு எண் 11' என்பதற்குப் பதிலாக 'கதவு எண் 11' என்று தவறுதலாகப் பதிவாகியுள்ளது. இந்தத் தவறைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், உண்மையான வீட்டு எண்கள் சேகரிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப்படும்" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி வாக்குத் திருட்டு குறித்து பிரசாரம் செய்து வரும் நிலையில், இந்த குளறுபடி பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.