வாக்காளர் பட்டியலில் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். ஒரே முகவரியில் அதிகமான வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு உரிய விளக்கம் அளிக்காமல் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் மனுதாரர் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என கூறி, மனுதாரருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.