டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது என தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில், ஆரம்பம் முதலே நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கலாம் என்று, மத்திய அரசுக்குக் குறிப்பு அனுப்பி, சுரங்க ஒப்பந்தம் வழங்கப்படும் வரையில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது.
மாண்புமிகு மத்திய சுரங்கத் துறை அமைச்சர் திரு கிஷான் ரெட்டி அவர்கள், சுரங்கம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து, தமிழக அரசு மேற்கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்று தெரிவித்த பின்னர், திமுக அரசு அது குறித்து அரிட்டாப்பட்டி விவசாயிகளுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
தற்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முற்படுவது, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது திமுக அரசின் கடமை. அதை விடுத்து, மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட பிறகும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காமல், நாட்களைக் கடத்திவிட்டு, தற்போது விவசாயிகள் போராட்டத்திற்குக் காரணமாக இருக்கிறது திமுக.
உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.