ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருவது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் ஒலிக்காததால் பாதியில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரை கண்டித்து இன்று திமுகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் முன்னதாக அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு எதிராக பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டதுடன், கைதும் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “திமுக ஆட்சியில், எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு.
ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை, ஆனால் மாண்புமிகு ஆளுநரையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு திமுக பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என, தமிழகம் முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க, காவல்துறை, சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K