தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவரது வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரத்தில் அவரது வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை முதல் 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று இந்தச் சோதனையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் கதவைத் திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ் நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்க்ய்ப் பேட்டியளித்துள்ளார்.
அதில், ''அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி நடைபெற்ற போது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறையினர் சோதனையை அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார்'' என்று கூறியுள்ளார்.
மேலும்,'' எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் நோக்கத்தில் வட மா நிலங்களில் பயன்படுத்திய உத்தியை பாஜக தமிழ் நாட்டிலும் பயன்படுத்தி வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.