திமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் புரிதல் இருப்பதால் தான் இரண்டு கட்சிகளுமே மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவதில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி மயிலாப்பூரில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை துவக்கி வைத்த ஜெயகுமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சமூகத்துக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜெயலலிதா பிறந்த நாளில் ஏழை மக்களுக்கு வழங்குவது அதிமுகவின் பண்பாகும் என்று தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினால் மட்டும் போதாது. விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற முக்கியத்துவத்தையும் திமுக அரசு கொடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி என்ன திட்டத்தை கொண்டு வந்தார் என்பதை வெளிப்படையாக சொல்ல தயாரா? என்றும் அவர் கேட்டார்.
திமுக, பாஜக இருவரும் புரிதலில் இருப்பதால் மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவதில்லை என்றும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் வளர்ச்சி அதிக அளவில் இல்லை என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை அமலில் இருப்பதால்தான் மாணவர்கள் உயர் கல்வி பயிலும் நிலைக்கு உள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.