ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அபார வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் தினகரன் இன்று பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அனைத்து அமைச்சர்களும் ஊட்டிக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகர் தேர்தல் பல தடைகளுக்கு பின்னர் நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தலில் பலம் வாய்ந்த அதிமுக, திமுக கட்சிகளை வீழ்த்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன்.
இவரது வெற்றி அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டிடிவி தினகரன் முக்கிய அரசியல்வாதியாக உருவெடுத்தார். இதனை அதிமுகவை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலரும் ரசிக்கவில்லை. இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் இன்று பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டது.
இதனையடுத்து இன்று கோட்டைக்கு வந்த டிடிவி தினகரனின் ஆதரவாளரான தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் பதவியேற்கிறார் என்று தெரிந்ததும், அனைத்து அமைச்சர்களும் ஊட்டிக்கு சென்று விட்டார்கள். இன்றே கோட்டை காலியாகி விட்டது என்றார்.