தினகரன் தரப்பு வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோவில் தனக்கு சந்தேகம் இருக்கிறது என நடிகர் ஆனந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 20ம் தேதி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ ஜெ. தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஜெயலலிதா படுக்கையில் அமர்ந்தவாறு, பழச்சாறு பருகிக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இதுவும் ஒரு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்தராஜ் “வெற்றிவேல் வெளியிட்ட வீடியோவில் சந்தேகம் இருக்கிறது. அந்த வீடியோவின் பின் புறத்தில் ஒரு பெரியம் மரம் இருக்கிறது. அவ்வளவு பெரிய மரம் அப்போலோ மருத்துவமனையில் இல்லை. ஆனால், போயஸ் கார்டன் வீட்டில் இருக்கிறது. எனவே, அந்த வீடியோ போயஸ் கார்டன் வீட்டில் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
தனக்கு பின்னால் இருப்பதை பார்க்க இந்த வீடியோவை ஜெயலலிதாவே எடுக்க சொன்னதாக சொல்கிறார்கள். அதில், உண்மையிருக்க வாய்ப்பில்லை. இதில் ஏதோ சூழ்ச்சி செய்து எடுத்துள்ளனர்.
அந்த வீடியோவின் அசல் பிரதி எங்கே இருக்கிறது? ஏனெனில், அசல் பிரதிதியில் அந்த வீடியோ எந்த தேதியில், நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இருக்கும். இதை அனைத்தும் விசாரணை கமிஷன் கண்டு பிடிக்க வேண்டும்.
இந்த வீடியோவை இத்தனை நாள் மறைத்து வைத்தது ஏன்?. தினகரன் அணியிலிருந்து சிலர் நீக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் நீக்கப்படலாம். எனவே, அவர்கள் இனிமேலாவது மனசாட்சிபடி மனம் திருந்தி அதிமுகவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
நேற்று பெங்களூர் சிறையில் பேட்டியளித்த தினகரனிடம் ஒரு தெளிவு இல்லை. எனவே, அவரை நம்பி செல்ல வேண்டாம். சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி” என அவர் தெரிவித்தார்.