டெல்லியில் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தனது சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றதாகக் கூறி, தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதா ராமகிருஷ்ணன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதா ராமகிருஷ்ணன், டெல்லி சாணக்கியபுரியில் உள்ள போலந்து தூதரகத்திற்கு அருகே காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது, காலை 6.15 மணியளவில், தலைக்கவசம் அணிந்த ஒரு நபர், ஸ்கூட்டியில் வந்து சுதா ராமகிருஷ்ணனின் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்.
“அந்த நபர் மெதுவாக எதிரே வந்ததால், அவர் ஒரு சங்கிலிப் பறிப்பு குற்றவாளி என்று நான் சந்தேகிக்கவில்லை. அவர் என் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்தபோது, என் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டன. என் சுடிதாரும் கிழிந்துவிட்டது. நாங்கள் இருவரும் உதவிக்காகக் கூச்சலிட்டோம்,” என்று சுதா ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
டெல்லி சட்டம் ஒழுங்கை மேற்பார்வையிடும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தூதரகங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்கள் நிறைந்த சாணக்கியபுரி போன்ற உயர்பாதுகாப்பு மண்டலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது" என்று சுதா ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். மேலும், 4 சவரனுக்கும் அதிகமான தனது தங்கச் சங்கிலியை மீட்டு, குற்றவாளியை கண்டறிந்து விரைவில் நீதி வழங்க வேண்டும் என்றும் அமித் ஷாவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.