மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில், "எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள் என்பதை பெருமையுடன் சொல்வேன்" என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் குறித்து வெறும் ஆவணங்களை மட்டுமே அனுப்பி வந்தார்கள் என்று விமர்சித்த அமித் ஷா, நரேந்திர மோடி ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனால் தான் பயங்கரவாதிகளுக்குப் பயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ப சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருக்கும்போது அப்சல் குரு தூக்கிலிடப்படவில்லை. இந்து பயங்கரவாதம் பற்றி யார் பேச ஆரம்பித்தது?" என்று கேள்வி எழுப்பிய அமித் ஷா, "எந்த இந்துவும் ஒருபோதும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என்று தேசத்தின் மக்கள் முன் நான் பெருமையுடன் சொல்ல முடியும்," என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிதான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு கொடுத்தது என்றும், அதை மீண்டும் கொண்டு வருவது பா.ஜ.க. அரசாங்கமாகத்தான் இருக்கும் என்றும் அமித்ஷா உறுதிபட கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் ராணுவத்திடம் துப்பாக்கிகளும், தோட்டாக்கள் கூட இல்லை என்றும், இன்று மோடி ஆட்சியில் நமது படைகள் நவீனமயமாக்கப்பட்டு, பாகிஸ்தானின் முழு வான் பாதுகாப்பு அமைப்பையும் அரை மணி நேரத்தில் நம்மால் அழிக்க முடியும் என்றும் அமித் ஷா பேசியது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.