மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டு உள்ளார். இதில் தொடர் புடைய இதர குற்றவாளி களைத் தேடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. மேலும், இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.