தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தி.மு.க. தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் கூட்டங்கள் இன்று தொடங்கப்பட்டன.
இதன் தொடக்கமாக, சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது சொந்த வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர் தனது வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயம் செய்து, ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவர்களுக்கான இலக்கை நிர்ணயித்துக் கொடுத்தார். இந்த குழுக்களில் மகளிர் இடம்பெறுவார்கள் என்றும், அவர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது 'எக்ஸ்' (X) தளத்தில், "எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்பு படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.