சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக மைதானத்தை சுற்றியுள்ள ரயில் நிலையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை அமைக்க கோரி போராட்டங்கள் வழுத்து வரும் நிலையில் இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடக்கவுள்ளது. இந்த போட்டி நடந்தால் அதை தடுக்க முயற்சி செய்வோம் என்றும், வீரர்களை கடத்துவோம் என்றும் ஒருசில அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இருப்பினும் திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகள் ஐபிஎல் போட்டியை எதிர்க்கவில்லை. மாறாக போட்டியை காண செல்லும் இளைஞர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மைதானத்தில் காவிரி குறித்த பதாகைகளை கொண்டு செல்லுங்கள் என்று கூறி வருகின்றனர்.
இதனால் மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் பேனர்கள், கொடிகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பார்க் டவுண், சிந்தாரிப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.