சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையை போன்று இல்லாமல், தற்போது பெய்யும் மழை விரைவில் நிற்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. ஆனால், இன்று மாலை தொடங்கியுள்ள மழை சற்று நேரத்தில் நின்றுவிடும் என்று பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"சென்னை தயாரா?" என்ற கேள்வியுடன், இடியுடன் கூடிய மேகக் கூட்டங்கள் சென்னையை நெருங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக, ஆவடியில் தான் மழைக்கான அறிகுறிகள் முதலில் தெரியும், பின்னர் அம்பத்தூரில் தொடங்கி, அதன் பிறகுதான் சென்னை நகரின் பிற பகுதிகளுக்கு மழை பரவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களை போல இன்று பலத்த மழை இருக்காது என்றும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்யாமலும் இருக்கலாம் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆவடி, திருநின்றவூர், அம்பத்தூர், மாங்காடு, கேகே நகர், காட்டுப்பாக்கம், நெற்குன்றம், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி, அயப்பாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.