சென்னையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, விடிய விடிய பெய்து இன்று காலை வரை நீடித்தது. இந்த தொடர் மழையால் நகரின் பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கின்றன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், இந்த தேங்கிய நீருக்கு மத்தியில் சிரமத்துடன் பயணித்து வருகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நிலவி வந்த அதிக வெப்பத்தை தணித்து, இந்த மழை குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையை உருவாக்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், மழைநீர் தேங்கியிருப்பதால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.