கொரோனா அச்சுறுத்தலால் நாடே முடங்கி வரும் சூழலில் தொழிலாளர்களுக்கு உதவ நீதிபதி ஒருவர் தனது சம்பளத்தை நிதியாக வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தொழில்துறை முடங்கி வருகிறது. ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகிறார்கள். ஆனால் தினக்கூலி தொழிலாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பெரிதும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இன்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொழில்களும் முடங்கியுள்ளதால் அவர்களுக்கு வெளியே வேலையும் அதிகம் கிடைப்பதில்லை.
இதை கருத்தில் கொண்டு கேரள அரசு அம்மாநில கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத நிவாரண தொகையும், உணவு பொருட்களும் வழங்க அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் வருவாய் இழந்து தவிக்கும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு மாத வருமானத்திற்கு பதிலாக நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது மாத வருமானமான 2.25 லட்சம் ரூபாயை அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். மேலும் மாத ஊதியம் பெறும் பலரும் இதுபோன்ற அமைப்பு சாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நிதியுதவி அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.