சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் விவகாரத்தில் 5 விதமான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரமாக சென்னை உள்ளது. சென்னை மாநகரின் சிறிய சந்துகள் கூட அதிகமான போக்குவரத்து உள்ளதாக இருக்கின்ற நிலையில் போக்குவரத்து விதிமீறல்களும் அதிகம் நடக்கும் வாய்ப்புள்ளது. இதனால் பல பகுதிகளிலும் போக்குவரத்து காவலர்கள் பணியில் உள்ளனர்.
தற்போது பெரும்பாலும் போக்குவரத்து காவலர்கள், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வருவது, 2க்கும் மேற்பட்டோர் பயணிப்பது உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து காவல் ஆணையர் அருண், 5 விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, டூவீலரில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் பயணிப்பது, ஓட்டுபவரும், அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணியாமல் இருப்பது, ஒருவழிப்பாதை மற்றும் சாலையின் இடது புறத்தை பயன்படுத்தாமல் எதிர் திசையில் வருவது, மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டி வருவது மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 5 விதிமீறல்களுக்கு கட்டாய அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K