துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை என கோவையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் சுயமாக வலுப்பெற்று வளர்ச்சி பெற்று வருவதாகவும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை உள்ளது என்றும் அவர் கூறினார். திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பது உறுதி என்றும், அதே நேரத்தில், எதிரணி தரப்பில் உள்ள அதிமுகவின் வாக்குசேகரிப்பு திறனை எவரும் சாதாரணமாக நினைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், அதிமுகவின் பாஜகவுடன் அமைந்துள்ள கூட்டணியை அதன் ஆதரவாளர்களே விரும்பவில்லை எனவும், மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு தேர்தலில் தனித்து நிற்பதாக அறிவித்து, இப்போது மீண்டும் கூட்டணியில் இணைந்ததற்கு விளக்கம் இல்லையென்றார்.
நடிகர் விஜய் தலைமையிலான “தமிழக வெற்றி கழகம்” எவ்வளவு வாக்குகளை பெறும் என்பது குறித்து கணிக்க முடியாத நிலை உள்ளது என்றும், அவர்கள் தனித்து போட்டியிடுவார்களா? அல்லது கூட்டணியாக வருவார்களா என்பது தெளிவில்லை என்றும் அவர் கூறினார்.
அதிகாரத்தை நோக்கி விழையும் சுவரொட்டிகள் குறித்து பேசும் போது, எந்தக் கட்சிக்கும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்பதும், இதை தவறாக பார்க்க தேவையில்லை. துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்.