சென்னையில் காற்று மாசு வழக்கத்தை விட 35% குறைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே சமயம் ஊரடங்கு காலகட்டத்தில் சென்னையில் 79% குற்றங்கள் குறைந்துள்ளதாக முன்னரே போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றங்கள் மட்டுமின்றி சாலை விபத்துக்களும் கணிசமாக குறைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது சென்னையில் காற்று மாசு வழக்கத்தை விட 35% குறைந்திருப்பதாக மத்திய மாசுக்க்கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாகன இயக்கமும், தொழிற்சாலைகள் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளதால் காற்று மாசு குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.