சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ஜெல்லாம் அணிந்து விளையாட முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் வெடித்தன.
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பினர். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நடத்தினால் மைதானத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்திருந்தார்.
ரஜினிகாந்த் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அப்படி மீறியும் போட்டி நடைபெறுமாயின் சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினால், நம் எதிர்ப்பு நாடு முழுவதும் பிரதிபலிக்கும் என்று ரஜினி உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் யாரும் கருப்புப்பட்டை அணிந்து விளையாடமாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.