தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். சென்னை பசுமைவழி சாலையில் உள்ள பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்று, கூட்டணியில் முடிவெடுக்கும் அதிகாரம் ஈ.பி.எஸ்ஸுக்கு வழங்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வரும் டிசம்பர் 14 ஆம் தேதி டெல்லி செல்லவிருக்கும் நயினார் நாகேந்திரன், அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து பேசவுள்ளார்.
டெல்லி பயணத்திற்கு முன்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளருடன் நயினார் நாகேந்திரன் நடத்திய இந்த பேச்சுவார்த்தை, தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தல்களுக்கான கூட்டணி குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடிப்பதை காட்டுகிறது.
அ.தி.மு.க. சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட டிசம்பர் 15 முதல் விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று பழனிசாமி அறிவித்திருக்கும் வேளையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.