சீனாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரிடர் ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக வைரஸ் காரணமாக கடுமையான காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், மீண்டும் ஒரு பேரிடர் ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் உருவாகியுள்ளது.
ஹெச்எம்பிவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், இதன் காரணமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விளைவாக, சீனாவின் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது.
ஹெச்எம்பிவி வைரஸை அவசர நிலையாக சீன சுகாதாரத் துறையோ அல்லது உலக சுகாதார அமைப்போ அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த வைரஸ் சீனாவைத் தாண்டி மற்ற நாடுகளிலும் பரவும் ஆபத்து இருப்பதால், அனைத்து நாடுகளும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.