Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏமாந்த மாணவர்களின் நிலை விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது: திமுக அரசு குறித்து அண்ணாமலை..!

Advertiesment
Annamalai

Mahendran

, வியாழன், 6 பிப்ரவரி 2025 (13:13 IST)
திமுகவின், கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி, நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகப், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து, முதலமைச்சரும், அமைச்சர்களும், ஆளுக்கொரு சதவீதத்தைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பெண்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை என பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்.
 
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்த உடன், முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும், வாக்குறுதி எண் 33 ஆக, சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக.
 
கடந்த ஆண்டு, விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சர் திரு. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழக அரசிடம் நிதி இல்லை. சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும், வாங்கிய கடனை விவசாயிகள் குறித்த காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் ஆணவமாகப் பேசினார். இத்தனைக்கும், கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலின்போதே, பயிர்க் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக கூறியிருந்தது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா?
 
திமுக அரசின் சாதனையாக, ஆட்சிக்கு வந்து, கடந்த 07.05.2021 முதல், 31.12.2023 வரை, ரூ.35,852.48 கோடி கூட்டுறவு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில், புயல், வெள்ளம் என, சிறு குறு விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். அப்படி இருந்தும், கடந்த 31.03.2024 வரை நிலுவையில் இருக்கும் கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.19,008 கோடி மட்டும்தான் எனில், இத்தனை கடினமான காலங்களிலும், சிறு குறு விவசாயிகள் தங்கள் கடனை முறையாகத் திரும்பச் செலுத்தி வருகிறார்கள் என்பதுதானே பொருள். திமுகவின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது திமுக.
 
பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை, நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். திமுகவின், கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி, நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

BSNL, MTNLக்கு சொந்தமான ரூ.16 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க முடிவு! ஏன் தெரியுமா?