Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்கவில்லை.. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? டாக்டர் ராமதாஸ்

Advertiesment
ramadoss

Siva

, ஞாயிறு, 26 ஜனவரி 2025 (12:48 IST)
வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்க  மறுப்பது தான் திமுக அரசின் சமூகநீதியா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

 
தமிழ்நாடு அரசு  வேளாண் துறையின் ஓர் அங்கமான வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் வட்டார தொழில்நுட்ப மேலாளர்களாகவும்,  வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களாகவும் பணியாற்றி வருபவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படாததுடன், அண்டை மாவட்டங்களுக்கு இடமாற்றம் கூட மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒப்பந்தப் பணியாளர்கள் என்றாலே அவர்களை கொத்தடிமைகளைப் போல  அரசு நடத்துவது கண்டிக்கத்தக்கது.
 
தமிழக அரசின் வேளாண் துறையில் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில்,  வட்டார தொழில்நுட்ப மேலாளர்களும்,  வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களும் கடந்த 2012-ஆம் ஆண்டில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.  தொடக்கத்தில் அவர்களுக்கு  முறையே ரூ.20,000, ரூ.8,500 ஊதியமாக வழங்கப்பட்டது. அதன்பின் 13 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், ஒரே ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு அவர்களின் ஊதியம் முறையே  ரூ.25,000, ரூ.15,0000 ஆக உயர்த்தப்பட்டதைத் தவிர அவர்களுக்கான எந்த உரிமையும் இதுவரை வழங்கப்படவில்லை. இதே பணியை செய்பவர்களுக்கு அசாம் மாநிலத்தில் முறையே ரூ.64,927, ரூ.37,821  ஊதியமாக வழங்கப்படும் நிலையில், அதில் பாதி கூட தமிழகத்தில் வழங்கப்படவில்லை.
 
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், ஒரு மாவட்டத்தில் பணியாற்றும்  வட்டார தொழில்நுட்ப மேலாளர்களையும்,  வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களையும் அருகில் உள்ள இன்னொரு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்வதற்கு கூட அதிகாரிகள் மறுக்கின்றனர். அவர்களின் பணி நியமனம் தொடர்பான அரசாணையில் அதற்கான விதிகள் இல்லை என்று கூறி இடமாற்றம் மறுக்கப்படுகிறது.  இந்த பணியாளர்களில் கிட்டத்தட்ட  50 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர். கைக்குழந்தைகளுடன், கருவுற்ற நிலையிலும் அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணியாற்ற அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்குவதற்குக் கூட தமிழக அரசு மறுப்பது மனிதநேயமற்ற செயலாகும்.
 
வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள்,  வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்கள் பணிக்கான ஊதியத்தில் பெரும்பகுதியை மத்திய அரசே வழங்குகிறது. அவர்களுக்கு ஆண்டுக்கு 10% ஊதிய உயர்வு வழங்குவதற்கும் மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஆனால், அதைப் பெற்றுக் கொள்ளும் தமிழக அரசு,  தொழில்நுட்ப மேலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.  திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களுக்கு  பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்டிருந்தாலும் கூட  அதை செயல்படுத்த திமுக அரசு தவறிவிட்டது.
 
பணி நிலைப்பு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு,  பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மகப்பேறு காலங்களில் விடுப்புடன் கூடிய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்நுட்ப மேலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசு மறுத்துவருகிறது. இது மனிதநேயமற்ற செயலாகும். இது தான் திமுக அரசின் சமூக நீதியா?
 
வேளாண் துறை தொழில்நுட்ப மேலாளர்களின் உணர்வுகளை மதித்தும், அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு  ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும்  தமிழக அரசு வழங்க வேண்டும். ஒரு மாவட்டத்திலிருண்டு இன்னொரு மாவட்டத்திற்கு சென்று பண்ணியாற்றும் தொழில்நுட்ப  மேலாளர்களை, குறிப்பாக பெண்களை அவர்களின் சொந்த மாவட்டத்திற்கே பணியிட மாற்றம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்: விஜய் குடியரசு தின வாழ்த்து..!