Publish Date: Fri, 13 Mar 2026 (14:40 IST)
Updated Date: Fri, 13 Mar 2026 (14:41 IST)
சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் ஒரு குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்பவர் போலீசார் தாக்கியதில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பாலத்திலிருந்து கீழே விழுந்ததால் ஆகாஷுக்கு கால் உடைந்ததாக போலீசார் கூறினார்கள். ஆனால், போலீசார் தாக்கியதில்தான் ஆகாஷ் உயிரிழந்தார் என ஆகாஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்த நிலையில்தான், ஆகாஷின் வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. சீருடை அணியாத சில போலீஸ் அதிகாரிகள் துணியால் என் கண்களைக் கட்டி காரில் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார்கள்.. ஓரு இடத்தில் என்னை அமரவைத்து எனது கெண்டைக்காலுக்கு கீழேயும் முட்டிக்கு கீழேயும் இரண்டு கற்களை வைத்து ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியில் எனது வலது காலில் ஓங்கி அடித்தார்கள்.. அடித்தவுடன் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்தம் வந்தது.. நான் வலியால் துடித்தேன்..
அதன்பின் கண் கட்டை அவிழ்த்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் பாலத்திலிருந்து கீழே விழுந்து விட்டதாக சொல்லுமாறு மிரட்டினார்கள் என அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயம் இருந்தததாகவும், மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஆகாஷின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினரும், உறவினர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.