சென்னையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நடிகை சனம் ஷெட்டி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போராட்டத்தின்போது, அமைச்சர் கே.என்.நேருவை நேரடியாக குறிப்பிட்டு, அவர் ஆவேசமாகப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சனம் ஷெட்டி, போராட்டத்தில் அமர்ந்துக்கொண்டு பேசியதாவது:
அமைச்சர் நேரு அவர்கள், உயிரோடுதான் இருக்கின்றீர்களா? மக்களுக்காக ஒரு கொள்கையை மாற்ற முடியவில்லை என்றால், அப்படிப்பட்ட ஓர் அரசாங்கம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? கடந்த சில நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இவர்களிடம் என்ன பிரச்சனை என்று கூட கேட்காமல், அனாதையாக விட்டுவிட்டார்கள்.
நீங்கள் இருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் சாவுங்கள்' என்று விட்டுவிட்டார்கள். கொரோனா நேரத்தில் நாம் உயிர்பயத்தில் இருந்தபோது, வீட்டு வாசலுக்கு கூட போகாத நிலையில், உயிரை பணயம் வைத்து, கடமை உணர்ச்சியோடு எங்களுக்காக நின்றவர்கள் இந்த தூய்மை பணியாளர்கள்தான். ஒவ்வொரு தெருவையும் சுத்தம் செய்தவர்கள் அவர்கள். அவர்கள் என் நண்பர்கள். இவர்களுக்காக இன்றைக்கு நான் இருக்கிறேன். இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல் கொடுப்பது என்னுடைய கடமையாகப் பார்க்கிறேன்.
எனக்கு இருக்கிற இந்த உத்வேகத்தில் ஒரு சதவீதம் கூட ஏன் அரசாங்கத்துக்கு இல்லை? உங்களுக்காக ஓட்டுப் போட்டவர்கள் இந்த மக்கள். உங்களுக்கு கண்ணு தெரியவில்லையா, காது கேட்கவில்லையா? மேயர் பிரியா அவர்கள் வருகிறார்கள், செய்தி வாசிப்பாளர் போல ஏதோ சொல்லிவிட்டு போகிறார்கள். ஆனால், தீர்வு வரவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அவர்கள் போராட்டம் நடத்துவார்கள்?
நீங்கள் தானே தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் ஆக்குவோம் என்று உத்தரவாதம் கொடுத்தீர்கள்? அதனால் தான் அவர்கள் வந்து கேட்கிறார்கள். எப்போது பணி நிரந்தரம் கொடுப்பீர்கள்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் ஒரு பேச்சும் பேசுகிறீர்கள்" என்று ஆவேசமாக சனம் ஷெட்டி பேசியுள்ளார்.
சனம் ஷெட்டியின் இந்த பேச்சு, இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.