Publish Date: Tue, 21 Apr 2026 (10:24 IST)
Updated Date: Tue, 21 Apr 2026 (10:29 IST)
தமிழக தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இறுதிக்கட்ட நாளான இன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் காலை முதலே தங்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சினிமாவிலிருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருப்பினும், தனது பிரச்சாரத்தை சரியாக மாலை 6 மணிக்குள் முடித்துக்கொள்வதை விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். என்ன நெருக்கடி இருந்தாலும், 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதில்லை என்ற கடுமையான கட்டுப்பாட்டை அவர் கடைப்பிடித்து வருகிறார்.
விஜய்யின் இந்த நேரக் கட்டுப்பாடு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு விதமாக விவாதித்து வருகின்றனர். குறிப்பாக, 6 மணிக்கு மேல் அவர் பிரச்சாரம் செய்யாததைச் சுட்டிக்காட்டி இணையத்தில் அவருக்கு எதிராக மீம்ஸ்களைப் பதிவிட்டு சிலர் கிண்டலடித்தும் வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "விஜய் 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் 'கரூர் சம்பவம்' தான். உண்மையில் அவருக்கும் இரவு நேரங்களில் பிரச்சாரம் செய்ய விருப்பம் உள்ளது. ஆனால், கரூரில் நடந்த அந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் அவர் அதனைத் தவிர்க்கிறார். இருட்டில்தான் எல்லா தவறுகளும் அசம்பாவிதங்களும் நடக்கும் என்பதை அவர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.