சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் ஒரு இளம் காதல் ஜோடி மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் கீழே கிடந்த நிலையில், ஆண் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இச்சம்பவம் காதல் தகராறில் நடந்த கொலை அல்லது தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் சண்டிலா பன்க்ரா மற்றும் சூடாமணி பன்க்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் சஷி மோகன் சிங் இது குறித்து பேசுகையில், “சம்பவத்திற்கு முன்பு, அந்த இளைஞர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். இது இவர்களின் உறவு சார்ந்த பிரச்சினை என்பதை காட்டுகிறது. ஆரம்பகட்ட விசாரணையில் தனிப்பட்ட மோதல் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், உறுதியான முடிவு பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்” என்று கூறினார்.
இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. போலீஸார் இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோகமான சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.