இந்திய மல்யுத்த வீராங்கனை மற்றும் அரசியல்வாதியுமான வினேஷ் போகட் மற்றும் அவரது கணவர் சோம்வீர் ராத்தி தங்களது முதல் குழந்தையாக ஆண் குழந்தையை வரவேற்றுள்ளனர். இன்று புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காலை 9 மணியளவில் குழந்தையை வினேஷ் போகட் பெற்றெடுத்தார்.
வினேஷ் போகட் தங்களது கர்ப்பம் குறித்த செய்தியை இந்த ஆண்டு மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவின் மூலம் பகிர்ந்திருந்தார். அதில், "எங்கள் காதல் கதை ஒரு புதிய அத்தியாயத்துடன் தொடர்கிறது," என்று குறிப்பிட்டிருந்தார்.
வினேஷ் போகட் மற்றும் அவரது கணவருக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமாரி செல்ஜா வாழ்த்து தெரிவித்தார். தனது எக்ஸ் பதிவில், "ஜூலானா சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வினேஷ் போகட்ஜி அவர்களுக்கு மகன் பிறந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், நல்வாழ்த்துக்களும். பிறந்த குழந்தை குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், சுபத்தையும் கொண்டு வரவும், நீங்கள் இருவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கவும் கடவுளை பிரார்த்திக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
வினேஷ் போகட் தனது சக மல்யுத்த வீரரான சோம்வீர் ராத்தியை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்கள் காதலர்கள் ஆவதற்கு முன்பு, இருவரும் ரயில்வேயில் பணிபுரிந்தபோதுதான் முதன்முதலில் சந்தித்தனர். மல்யுத்தத்தின் மீதான பொதுவான அன்பும் ஆர்வமும் அவர்களை நெருக்கமாக்கி, நட்பு காதலாக மாறி, இறுதியில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த பிறகு வினேஷ் போகட் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.