சீதையின் பிறப்பிடமாக கருதப்படும் சீதாமார்ஹி மாவட்டத்தில் அமைந்துள்ள புனௌரா தாம் ஜானகி கோயில் உள்ளிட்ட புனித தலங்களை புணரமைக்கப்பட ரூ.882.87 கோடி மதிப்பிலான மாபெரும் வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தத் திட்டம் குறித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது சமூக வலைத்தளமான X தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், புனௌரா தாம்மில் ஒரு பிரம்மாண்டமான கோயிலும், அதனுடன் தொடர்புடைய பிற கட்டுமான பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த புதிய கட்டுமானப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், சீதையின் பிறப்பிடத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் வளர்ச்சி திட்ட அறிவிப்பு, அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.