ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வந்ததை அடுத்து, அந்நாடு சில அதிரடி சலுகைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், 2022 ஆம் ஆண்டு பதிவானதை காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது. அரசு அலுவலகங்களில் முதல் கட்டமாக இந்த சலுகை கொண்டு வரப்பட உள்ளதாகவும், இதனை அடுத்து படிப்படியாக தனியார் நிறுவனங்களுக்கும் இந்த சலுகை கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாகவும், இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்பதால் உடல் மற்றும் மன அளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும், இந்த சலுகை காரணமாக அடுத்த ஆண்டு குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் திருமண உறவில் மற்றும் குழந்தை பெறுவதில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று கூறி வருகிறது.