உத்தரப்பிரதேசத்தில், கொலையாளிகளுக்கு உதவுவதற்காக பணம் பெற்றுக்கொண்டு போலியான பிரேத பரிசோதனை அறிக்கைகளை வழங்கி வந்த ஒரு பெரிய மோசடி கும்பல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 31 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக சம்பல் மாவட்டத்தில் நடைபெற்று வந்த இந்த மோசடியில் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், பிணவறை ஊழியர்கள் என பலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு போலி பிரேத பரிசோதனை அறிக்கை தயாரிக்க ரூ. 50,000 வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்குகளில், உண்மையான உடற்கூறாய்வு அறிக்கைகளை மாற்றி, கொலைக்கான காரணத்தை மறைத்து, குற்றவாளிகளை நிரபராதிகளாக மாற்றும் வேலைகள் நடந்துள்ளன. சில நேரங்களில், உண்மையான அறிக்கைகள் "காணாமல் போனதாக" அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு பேருந்து விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட ஒருவரின் உடலில் காயங்கள் இருந்தபோதிலும், அவரது உடற்கூறாய்வு அறிக்கை "தூக்கத்திலேயே மரணம்" என்று குறிப்பிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அறிக்கை கேட்டபோது, அது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மோசடி குறித்து இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.