பஞ்சாபில் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த காய்கறி வியாபாரி ஒருவர், ஒரு பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில், சுக்விந்தர் கவுர் என்ற பெண்ணிடம் காய்கறி வியாபாரி ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த பெண் அதற்கு மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சுக்விந்தர் கவுர் அந்த வியாபாரியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கோபமடைந்த அந்த வியாபாரி, பெட்ரோலை எடுத்துக்கொண்டு வந்து, சுக்விந்தர் கவுரின் வீட்டிற்குத் தீ வைத்துள்ளார். இந்தச் சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தீ விபத்தில் சுக்விந்தர் கவுர் மற்றும் அவரது வீட்டில் இருந்த இரண்டு பேர் என மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள காய்கறி வியாபாரியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.