அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் Generic மருந்துகளின் மீது வரி விதிக்கும் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கைவிட்டுள்ளதாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்துள்ளது. இந்த முடிவு, அமெரிக்க நுகர்வோருக்கும், அமெரிக்கச் சந்தைக்கு அதிக மருந்துகளை வழங்கும் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் பெரிய நிவாரணமாகும்.
அமெரிக்க மருந்து இறக்குமதியில் 47 சதவீதம் இந்தியாவிலிருந்து விநியோகிக்கப்படுகிறது. Generic மருந்துகளுக்கு வரி விதித்தால் அமெரிக்காவில் விலை உயர்வு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம் என்று டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை குழு உறுப்பினர்கள் வாதிட்டதால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
மேலும், இந்தியா போன்ற நாடுகளில் மலிவாக உற்பத்தி செய்யப்படும் இந்த மருந்துகளுக்கு அதிக வரி விதித்தாலும், அமெரிக்காவில் உற்பத்தி செய்வது லாபகரமாக இருக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய நிறுவனங்கள் ஆண்டுதோறும் சுமார் $20 பில்லியன் மதிப்புள்ள Generic மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்த சலுகை, பிராண்டட் மருந்துகளுக்கு குறைந்த விலையில் மாற்றுகளை வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.