மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக ஒரு வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதன் விளைவாக, அவர் வேளாண்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தத்தத்ரேயே பர்னே புதிய வேளாண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோக்டே தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆகப் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து பதிலளித்த மாணிக்ராவ் கோக்டே, அது வெறும் 10 முதல் 12 விநாடிகள் மட்டுமே என்றும், அது ஒரு பாப்-அப் விளம்பரம் என்றும், அதை மூடினேனே தவிர, தான் விளையாடவில்லை என்றும் தெரிவித்தார். தனக்கு எதிராகச் சதி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், வெளியான தகவல்களின்படி, கோக்டே 18 முதல் 22 நிமிடங்கள் வரை அந்த விளையாட்டில் ஈடுபட்டது வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இது, அவரது விளக்கத்திற்கு முரணாக உள்ளது.
இந்தச் சம்பவம், சட்டமன்றத்தின் மாண்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புணர்வு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.