இந்தியா-பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என ஏற்கனவே பலமுறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் அதை ஒருமுறை கூறியுள்ளார். இம்முறை, இந்தப் போரில் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவை எந்த நாட்டின் போர் விமானங்கள் என்பதை அவர் கூறாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இரு நாட்டு தலைவர்களின் ஒப்புதல்படி போர் நிறுத்தப்பட்டது. ஆனால், போர் நிறுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை, "நான் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்" என்று டிரம்ப் பலமுறை கூறி வருகிறார். இதை மத்திய அரசும் பலமுறை மறுத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், "இந்தியா-பாகிஸ்தான் போரில் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று கூறினார். இருப்பினும், அந்த விமானங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதை அவர் குறிப்பிடவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிரம்பின் பேச்சை அடுத்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றன. 24வது முறையாக "இந்தியா-பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்" என்று டிரம்ப் கூறிய நிலையில், இதற்குப் பிரதமர் மோடி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.