இந்தியாவில் தயாரிக்கப்படும் பீர் வகைக்கு உலகளவிலான விருது கிடைத்துள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.
உலகம் முழுவதுமே மதுபானங்கள், பீர் வகைகளை விரும்பும் மக்கள் அதிகமாக உள்ள நிலையில் ஏராளமான நிறுவனங்கள் பீர் உள்ளிட்ட பானங்களை தயாரித்து வருகின்றன. அவ்வாறாக உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் பீர் வகைகளை ஊக்குவிக்கும் விதமாக World Beer awards என்ற நிகழ்வு மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களால் நடத்தப்படுகிறது. இதில் பீர் வகைகளின் சுவை, தரம் போன்றவை மதிப்பிடப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
உலக அளவில் பல நாட்டு பீர் வகைகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிம்பா ஸ்டவுட் பீருக்கு சுவையான பீருக்கான வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. ஜெர்மானிய முறைப்படி தயாரிக்கப்படும் இந்த சிம்பா ஸ்டவுட் பீர் மிக குறைந்த கசப்பு சுவையுடனும், கோதுமை, கொத்தமல்லி, சிட்ரிக் அமிலம் உள்ளிட்டவை அடங்கிய மணம் மிக்க பீராக தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
உலக அளவில் இந்திய பீருக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பானங்களின் தரம் குறித்து உலக அளவில் மதிப்பீட்டை உருவாக்குவதாக பீர் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K