இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகமாக உள்ள நிலையில், பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி ஒருவரின் வீடு தாக்கப்பட்டதாகவும், அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்துகிறது.
பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காஷ்மீரில் உள்ள உரி என்ற பகுதியில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், ரஜோரி மாவட்ட வளர்ச்சி அதிகாரி ராஜ்குமார் தாப்பா என்பவர் உயிரிழந்தார். அவரது வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து முதல்வர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஆன்லைன் கான்பிரன்ஸ் கூட்டத்தில் ராஜ்குமார் தாப்பா பங்கேற்றதாகவும், அவர் தகுந்த ஆலோசனை கூறியதாகவும், இன்று அவர் உயிருடன் இல்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும், அவரது மறைவுக்கு தனது இரங்கல்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உரி பகுதியில் நர்கீஸ் பானு என்ற பெண்ணும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற சிதறல் தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.