தெலங்கானா மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாவோயிஸ்ட் ஆதரவாக செயல்பட்டு வந்த சஞ்சீவ் மற்றும் பார்வதி என்ற தம்பதிகள் தற்போது மனம் திருந்தி சரணடைவதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சஞ்சீவ் ஒரு புரட்சிகரமான பாடகர் என்பதும், பார்வதியும் ஒரு பாடகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவான பாடல்களை மக்கள் மத்தியில் பாடி புரட்சியை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. 62 வயதான சஞ்சீவ் ஏற்கனவே பல துப்பாக்கிச் சண்டைகள் மற்றும் என்கவுன்டர்களில் இருந்து தப்பியவர் என்றும், அவரது மனைவியும் பலமுறை உயிர் தப்பியவர் என்றும் கூறப்படுகிறது.
தற்போது சஞ்சீவுக்கு 62 வயதும், அவரது மனைவி பார்வதிக்கு 50 வயதும் ஆகி உள்ள நிலையில், இருவரும் மாவோயிஸ்ட் வாழ்க்கையை விட்டுவிட்டு இயல்பு வாழ்க்கை வாழ முடிவு செய்துள்ளதாகவும், அதன் காரணமாக சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தெலங்கானாவைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் தலைமறைவாக உள்ள மாவோயிஸ்டுகள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பி கண்ணியமான வாழ்க்கை வாழும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இது ஒரு தார்மீக வெற்றி என்றும் தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.