கோவிலின் கருவறைக்குள் செல்ல மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட கிறிஸ்தவ ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேசனின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, அந்த அதிகாரியின் பணிநீக்கத்தை உறுதி செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்டது.
"ராணுவம் ஒரு மதச்சார்பற்ற நிறுவனம்; அதன் ஒழுக்கத்தை சமரசம் செய்ய முடியாது," என்று அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தது.
"கோவிலின் உள்ளே செல்ல மறுப்பது, சக வீரர்களை அவமதிப்பதாகும். இது ஒரு ராணுவ அதிகாரி செய்த மிகப்பெரிய ஒழுங்கீனம்," என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடுமையாக விமர்சித்தார்.
மத சடங்குகளை செய்ய மறுப்பது வேறு; ஆனால் உள்ளே நுழைய மறுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும், அவரது சொந்த மத குரு அனுமதி அளித்த பின்பும் அவர் மறுத்தது ஒழுக்கக்கேடு என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அதிகாரியின் மேல்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், ராணுவம் போன்ற ஒரு நிறுவனத்தில் ஒழுக்கமே முதன்மையானது என்று மீண்டும் உறுதி செய்தது.