Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்சநீதிமன்றம் கண்டிப்பு.! தெலங்கானா முதல்வர் நிபந்தனையற்ற வருத்தம்.!!

Revanth Reddy

Senthil Velan

, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (12:45 IST)
கவிதாவின் ஜாமின் குறித்து நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரத்தில் நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
 
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா ஜாமீனில் வெளியே வந்தது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார்.
 
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியாவிற்கு 15 மாதம் கழித்து தான்ஜாமீன் வழங்கப்பட்டது என்றும் ஆனால் கவிதாவிற்கு வெறும் 5 மாதங்களிலேயே நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும் என்றும் அவர் கூறியிருந்தார். பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சி ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக விமர்சித்திருந்தார்.
 
ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உச்சநீதிமன்றம்,  “தங்களின் தனிப்பட்ட கருத்திற்கு நீதிமன்றத்தை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என கூறியிருந்தது. நாங்கள் எப்படி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற விஷயங்களில் தலையிடாமல் உள்ளோமோ அதே போன்று நீங்களும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று உச்ச நீதிமன்றம் கண்டித்து இருந்தது.
 
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்திய நீதித்துறை மீது எனக்கு மிகுந்த மரியாதையும் முழு நம்பிக்கையும் உள்ளது. ஆகஸ்ட் 29, 2024 அன்று சில பத்திரிகைகளில் நான் கூறியதாக வெளியான செய்திகள், நீதிமன்றத்தையும், நீதித்துறையின் ஞானத்தையும் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
 
நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். பத்திரிகைகளில் வெளியான அந்தச் செய்திகளுக்காக நிபந்தனையின்றி எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை மீதும், அதன் சுதந்திரமான செயல்பாடு மீதும் எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட நான், நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறேன் என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு.! 6 மாதத்தில் முடிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!