கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை சிபிஐ இன்று தாக்கல் செய்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர், கடந்த, 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவி படுகொலையால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த மருத்துவமனையை சூறையாடினர். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்தும், உரிய பாதுகாப்பு கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவி படுகொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேற்கு வங்க அரசின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது என்று கூறியிருந்தது. மேலும் வழக்கு விசாரணை அறிக்கையை சி.பி.ஐ., சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதற்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்தது.மாணவி படுகொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். போராட்டத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது என்றும் மருத்துவர்கள் பணிக்கு மீண்டும் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிடில் அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவர் என்று குறிப்பிட்டனர்.
மேலும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு ஒன்று அமைக்க வேண்டும் என்றும் மனிதாபிமானமற்ற முறையில் மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுகின்றனர் என்றும் மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.