தெரு நாய்களின் தொல்லைகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி வழங்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
முன்னதாக, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, டெல்லி - என்சிஆர் பகுதியில் உள்ள அனைத்துத் தெரு நாய்களையும் உடனடியாக பிடித்து, நிரந்தரமாகக் காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆகஸ்ட் 11-ஆம் தேதி உத்தரவிட்டது.
ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 'கான்ஃபரன்ஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் (இந்தியா)' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் மற்றும் மனுதாரர் என இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்குகிறது, ஆனால் அதை யாரும் செயல்படுத்துவதில்லை. அரசின் செயலற்ற தன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது" என்று உள்ளூர் அமைப்புகளைக் கடுமையாகக் கண்டித்தனர். மேலும், ஒருபுறம் மனிதர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், மறுபுறம் விலங்கு நல ஆர்வலர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு, அனைவரையும் பொறுப்புடன் செயல்பட அறிவுறுத்தினர்.
மேலும் நீதிமன்றம், முந்தைய இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து, இந்த விவகாரம் தொடர்பான இறுதித் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.