டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள தெரு நாய்களை பிடித்து அடைக்க கோரிய ஆகஸ்ட் 11 தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. உள்ளூர் அமைப்புகளின் செயலற்ற தன்மையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
சட்டங்களும் விதிகளும் நாடாளுமன்றத்தால் இயற்றப்படுகின்றன, ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. உள்ளூர் அதிகாரிகள் தங்கள் கடமைகளை செய்வதில்லை, அவர்கள் இங்கு வந்து பொறுப்பேற்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியது பரபரப்பை ஏற்படுத்டியுள்ளது.
இந்த வழக்கில் டெல்லி அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 10,000 நாய்க்கடி சம்பவங்கள் நடப்பதாகவும், ஒரு வருடத்திற்கு 305 பேர் ரேபிஸ் நோயால் இறக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். கருத்தடை செய்வதால் ரேபிஸ் நோய் பரவுவது நிற்காது என்றும், நாய்களைக் கொல்வதற்குப் பதிலாக அவற்றைப் பிரித்து அடைக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும், அந்த விதிகளின்படி, நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போட்டுவிட்டு, அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
ஆனால், ஆகஸ்ட் 11-ஆம் தேதி தீர்ப்பு, நாய்களை நிரந்தரமாக அடைக்க வேண்டும் என்று கூறுவது அந்த விதிகளுக்கு எதிரானது என்றார். போதுமான அடைக்கலங்கள் இல்லாத நிலையில், நாய்களை அடைக்க உத்தரவிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார்.