பாகிஸ்தானை நான்கு பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்ற கருத்தை பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாபயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து இந்தியா–பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்தியா, பாகிஸ்தானிய பயண விசாக்களை ரத்து செய்து, அவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு செல்ல உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், சுப்ரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தானை நான்கு பகுதிகளாக பிரிக்க வேண்டும். பலுசிஸ்தான், சிந்து, பஷ்தூனிஸ்தான் மற்றும் மேற்கு பஞ்சாப் என தனித் தேசங்களாக அங்கீகரிக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.
அவரது பார்வையில், பாகிஸ்தானை முற்றிலும் அழித்து, அந்த பகுதிகளை தனி நாடுகளாக உருவாக்கினாலே இந்தியா நிரந்தர அமைதியை பெற முடியும் எனவும், தற்போது அந்த பகுதிகள் இந்தியா எதிர்க்கும் பாகிஸ்தானின் பாகங்களே ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.