இந்திய பிரதமர் மோடி, வெளிநாட்டு பொருட்கள் விற்பனையை சொந்த நாட்டில் குறைக்க வேண்டும் என பேசியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை தொடங்கிய இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள போதிலும் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இந்நிலையில் குஜராத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் மற்றும் அதன் தீவிரவாத ஆதரவு மனநிலையையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் பேசினார். அப்போது அவர் “மே 6 ஆம் தேதி இரவு, நமது ஆயுதப் படைகளின் பலத்துடன் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியது. ஆனால் இப்போது, இந்த ஆபரேஷன் சிந்தூர் மக்களின் பலத்துடன் முன்னேறும். நமது ஆயுதப் படைகளின் பலம் மற்றும் மக்களின் பலம் பற்றி நான் பேசும்போது, ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் வளர்ச்சியில் ஒரு பங்காளியாக மாற வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
2047 ஆம் ஆண்டுக்குள் ஒரு விசித் பாரதத்தை கட்டியெழுப்பவும், நமது பொருளாதாரத்தை உலகளவில் 4 வது இடத்திலிருந்து 3 வது இடத்திற்கு கொண்டு செல்லவும் நாம் அனைவரும் பங்களித்தால், நாம் வெளிநாட்டு பொருட்களை நம்பியிருக்க மாட்டோம்.
கிராம வணிகர்கள் எவ்வளவு லாபம் ஈட்டினாலும், அவர்கள் வெளிநாட்டு பொருட்களை விற்க மாட்டார்கள் என்று உறுதிமொழி எடுக்க ஊக்குவிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கணேஷ் சிலைகள் கூட வெளிநாட்டிலிருந்து வருகின்றன, கண்கள் கூட சரியாகத் திறக்காத சிறிய கண்கள் கொண்ட கணேஷ் சிலைகள்.
ஒரு குடிமகனாக, ஆபரேஷன் சிந்தூருக்காக, நான் உங்களுக்காக ஒரு பணியை வைத்திருக்கிறேன்: வீட்டிற்குச் சென்று 24 மணி நேரத்தில் நீங்கள் எத்தனை வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற பட்டியலை உருவாக்குங்கள்.” என பேசியுள்ளார்.
உள்நாட்டு வணிக மேம்பாட்டிற்காக பிரதமர் மோடி இவ்வாறாக பேசியதாக கூறப்படுகிறது. அதேசமயம் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் பல நாட்டு தனியார் நிறுவனங்களும் தங்கள் கடைகளை அமைத்தும், ஏற்றுமதியிலும் லாபம் பார்க்கின்றன. அப்படி இருந்தும் போர் சமயத்தில் உலக நாடுகளின் ஆதரவு குரல்கள் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை என்ற வகையில் ஒரு மறைமுக பொருளாதார தாக்குதலாகவும் மோடி இதை கட்டமைப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K