கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தில், தொடர் கொலைகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயினம்மா என்ற பெண்ணின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 68 வயது செபாஸ்டியன் என்பவர் மேலும் மூன்று பெண்கள் காணாமல் போனதற்கும் பொறுப்பா என விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சேர்த்தலை அருகேயுள்ள பல்லிப்புறத்தில் உள்ள செபாஸ்டியனின் வீட்டில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சுமார் 20 எரிந்த மனித எலும்பு துண்டுகள், பற்கள், ரத்தக்கறைகள், பெண்களின் உடைகள், மற்றும் ஒரு கைப்பையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செபாஸ்டியன் தனியாக வசித்த அல்லது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்களை குறிவைத்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
தற்போது, கோட்டயம் மற்றும் ஆழப்புழா குற்றப்பிரிவு பிரிவுகள், 2006-ஆம் ஆண்டு முதல் காணாமல் போன பிந்து பத்மநாபன் மற்றும் 2012-ஆம் ஆண்டு காணாமல் போன ஆயிஷா ஆகிய இரு பெண்களின் வழக்குகளுக்கும் செபாஸ்டியனுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கு, கேரளாவில் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர் கொலைகளுக்கு சமமான இந்த வழக்கில், மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.